அழ.வள்ளியப்பா குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். காரைக்குடி குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்புவகித்தார். அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.
1979 -ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்கி அறக்கட்டளை நிகழ்வில் “வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
1981 -ல் 5வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் “வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
1963 ஆம் ஆண்டில் லக்னோவில் நடைபெற்ற அகில இந்திய குழந்தை எழுத்தாளர் மாநாட்டில் பதக்கமும் பாராட்டிதழும் வழங்கப்பட்டன. குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்று சில அமைப்புகள் பாராட்டி போற்றியுள்ளனர்.
1982 -ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினால் “தமிழ்ப் பேரவைச் செம்மல்” என்று விருதளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
1982ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்விக்குழுவில் வாழ்நாள் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப் பட்டார்.
1970 நவம்பர் 22ஆம் நாள் “குழந்தைக்கவிஞர் இலக்கியப்பணி” வெள்ளிவிழா சென்னையில் நடைபெற்றது.
பூவண்ணன் தலைமையில் இயங்கிய பாலர் பண்பாட்டுக்கழகம் 1980ஆம் ஆண்டில் ‘வள்ளியப்பா வானொலி-தொலைக்காட்சிச் சிறுவர் சங்கம்’ என்னும் பிரிவைத் தொடங்கியது. ‘பிள்ளைக்கவியரசு’ என்னும் பட்டத்தை சென்னை பாரதி இளைஞர் சங்கம் வழங்கியது. ‘மழலைக்கவிச்செம்மல்’ என்னும் பட்டத்தை காரைக்குடி சர்வதேசக் குழந்தைகள் ஆண்டுவிழாக்குழு வழங்கியது. அழ. வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது மணிவிழா ஆண்டில் “குழந்தைக்கவிஞர் வள்ளியப்பா (வாழ்க்கை வரலாறு) என்னும் நூலை முனைவர் பூவண்ணன் எழுதினார். அதனை 1982 நவம்பரில் வானதி பதிப்பகம் வெளியிட்டது.
பெரணமல்லூர் சேகரன் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவுநாள் (மார்ச் 16)